இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்குமாறு மோடி வலியுறுத்தல்..
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் இளைஞர்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என நம்புவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதே போல், தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபைத் தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் இடைத் தேர்தல்களும் இன்று நடைபெறுகின்றன. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பதிவு வருமாறு:
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் இடைத்தேர்தல்களும் நடைபெறுகின்றன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து இந்த ஜனநாயகத் திருவிழாவை சிறப்பிக்க வலியுறுத்துகிறேன். குறிப்பாக, இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.