மகாராஷ்டிரா தேர்தல்.. பணபட்டுவாடா புகார்.. வேட்பாளர் கார் தீவைப்பு

மகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது.

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபைத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மழை காரணமாக காலை 10 மணி வரை பல பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. காலை 10 மணி வரை வெறும் 3 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது. அதன்பின், மழை நின்று விட்ட இடங்களில் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாகி உள்ளது.  

அமராவதி மாவட்டம், மோர்ஷி வருட் சட்டசபைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் அனில் போன்டேவை எதிர்த்து சுவாபிமானி ஷெட்கரி சங்கத்னா கட்சியின் வேட்பாளர் தேவேந்திர புயார் போட்டியிடுகிறார். இவர் இன்று தொகுதிக்குள் வாக்குப்பதிவு நிலவரத்தைப் பார்ப்பதற்காக சென்ற போது அவர் மீது கார் மீது சில மர்மநபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர் வந்த காரை சிலர் தாக்கி தீ வைத்தனர். இதில் வேட்பாளர் தேவேந்திராவுக்கும் காயம் ஏற்பட்டது.

இது குறித்து சுவாபிமாணி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜு சேத்தி கூறுகையில், எங்கள் வேட்பாளர் தேவேந்திர புயார் போட்டியிடும் தொகுதியில் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். இது பற்றி நாங்கள் போலீசாரிடம் புகார் செய்தோம். அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

இதற்கு பிறகுதான், தேவேந்திராவின் கார் வந்தபோது காரை சிலர் அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளார்கள். தேவேந்திர புயார் காயமடைந்ததால் அமராவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார். 

More News >>