விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம்..
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் இன்று(அக்.21) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதே போல், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. நாங்குநேரியில் ஒரேயொரு வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
காலை 9 மணியளவில் விக்கிரவாண்டி தொகுதியில் 12.80 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 18.41 சதவீத வாக்குகளும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9.66 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. 11 மணிக்கு விக்கிரவாண்டியில் 32.54 சதவீதமாகவும், நாங்குநேரியில் 23.89 சதவீதமாகவும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 28.17 சதவீதமாகவும் வாக்குப்பதிவு அதிகரித்தது.
மதியம் ஒரு மணியளவில் விக்கிரவாண்டியில் 54.17 சதவீதமும், நாங்குநேரியில் 41.35 சதவீதமும், புதுச்சேரி காமராஜ் நகரில் 42.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.