எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரையில்தான் விழும்.. பாஜக எம்.எல்.ஏ. பேச்சு.. ராகுல்காந்தி கிண்டல்..
வாக்கு இயந்திரத்தில் நீங்கள் எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரை சின்னத்தில் வாக்கு பதிவாகும், மோடி ரொம்ப அறிவாளி என்று பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. இதை தனது ட்விட்டரில் போட்டு, பாஜகவில் மிகவும் நேர்மையான மனிதர் என்று ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற மத்தியப் பிரதேச தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக ஏதோ தில்லுமுல்லு செய்திருப்பதாக புகார் எழுந்தது. வாக்காளர் எந்த பட்டனை அழுத்தினாலும் அது பாஜகவின் தாமரை சின்னத்தில் விழுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்பட 21 அரசியல் கட்சிகள், வாக்கு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன. ஆனால், அம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதன்பின், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் பாஜக தலைவர் அமித்ஷா பேட்டியளித்தார். அதே போல், பாஜக 303 தொகுதிகளில் வென்றது. இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய் ஆகியோர் பெரிய வெற்றி அடைந்த போது எல்லாம் மக்களுக்கு சந்தேகம் எழவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், அரியானாவில் அசாந்த் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பக்சிஷ்சிங் விர்க் தனது பிரச்சாரத்தின் போது பேசிய வீடியோ ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர், நீங்கள் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் எங்களுக்கு தெரியாது என்று நினைக்காதீர்கள். நாங்கள் அதை கண்டுபிடித்து விடுவோம். மோடி ரொம்ப அறிவாளி. முதலமைச்சர் கட்டார் ரொம்ப அறிவாளி. நீங்கள் எந்த பட்டனை அமுத்தினாலும் அது தாமரைச் சின்னத்திற்குதான் விழும் என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை டேக் செய்து, பாஜகவில் உள்ள மிக நேர்மையான மனிதர் என்று கிண்டலடித்துள்ளார்.