ஜெயலலிதா கைரேகை விவகாரம்.. சிபிஐ விசாரிக்க திமுக வலியுறுத்தல்..

அதிமுக வேட்பாளர் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மனு கொடுத்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். அவரது வேட்புமனு ஆவணங்களில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் கையெழுத்திற்குப் பதிலாக அவரது கைரேகை வைக்கப்பட்டது. ஜெயலலிதா அந்த சமயத்தில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.

தேர்தலில் தோற்ற திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், அதிமுக வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவர் சுயநினைவில் இல்லை. அவரது கைரேகையை வைத்து ஆவணங்கள் தாக்கல் செய்தது தவறு என்று அவர்தரப்பில் வாதாடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதியன்று அளித்த தீர்ப்பில், ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்று அறிவித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதியன்று ஏ.கே.போஸ் மரணமடைந்தார். இதன்பின்னர், திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், டாக்டர் சரவணன் நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், ஜெயலலிதா சுயநினைவில் இல்லாத நேரத்தில் அவரது கைரேகையை வேட்புமனு ஆவணங்களில் வைத்து அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். இது சட்டப்படி தவறு. தற்போது அவரது தேர்தல் செல்லாது என்று ஐகோர்ட்டும் தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே, ஜெயலலிதா கைரேகையை வைத்து மோசடி செய்ததாக சசிகலா, அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அப்போதைய கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சி.பி.ஐ. இந்த புகாரை ஏற்று விசாரிக்குமா என்பது விரைவில் தெரியும்.

More News >>