தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்
ராஞ்சியில் நடைபெற்ற 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை, இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நடைபெற்றது. கடந்த 19ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி மளமளவென ரன்களை குவித்தது. 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். அவர் மொத்தம் 255 பந்துகளை எதிர்கொண்டு, 212 ரன் எடுத்தார். அதில் 6 சிக்சர்களும், 28 பவுண்டரிகளும் அடங்கும். ரஹானே 192 பந்துகளில் 115 ரன் எடுத்தார். அவர் ஒரு சிக்சரும், 17 பவுண்டரிகளும் அடித்தார்.
இரண்டாவதாக ஆடிய தென் ஆப்ரிக்க அணி, 162 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹம்சா 62, லிண்டே 37 ரன்கள் எடுத்தனர். இந்தியாவை விட 355 ரன்கள் குறைந்திருந்ததால், பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. அதிலும் 133 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால், தென் ஆப்ரிக்காவை இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், நடீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்த அபார வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்த தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.