பத்தொன்பது வருடம் என்றாலும் சிறையில் இருப்போம் - வைகோ உணர்ச்சி பேச்சு

நெடுமாறனும் நானும் விடுதலை புலிகளை ஆதரித்தோம் என்ற காரணத்திற்க்காக பத்தொன்பது மாதம் சிறையில் இருந்தோம். ஜாமீன் கேட்டோமா? இல்லை. பத்தொன்பது வருடம் என்றாலும் இருப்போம் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மே பதினேழு இயக்கம் சார்பாக ''வெல்லும் தமிழ் ஈழம்'' மாநாடு சேப்பாக்கம் அண்ணா கலை அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஈர்ப்பாளர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நானும் பழ.நெடுமாறன் அவர்களும் 43 ஆண்டுகளை ஈழ விடுதலைக்காகவும் தமிழ் உரிமைகளுக்காகவும் சுயநலமின்றி எங்கள் வயதைக் கொடுத்திருக்கிறோம், எங்கள் காலம் முடிந்துவிடும். அடுத்து வரும் காலத்தை யோசிக்கிறவன் நான்.

நெடுமாறனும் நானும் விடுதலை புலிகளை ஆதரித்தோம் என்ற காரணத்திற்க்காக பத்தொன்பது மாதம் சிறையில் இருந்தோம். ஜாமீன் கேட்டோமா? இல்லை. பத்தொன்பது வருடம் என்றாலும் இருப்போம்.

ஒழுக்கத்தில் உறுதியில், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் காட்டுக்குள்ளே இருந்துகொண்டு விமானப்படையை தயாரித்தவன் இந்த உலக வரலாற்றில் எங்கள் பிரபாகரனை தவிர யார்? காட்டுக்குள் இருந்துகொண்டு நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்த எங்கள் பிரபாகரனுக்கு நிகராக உலக வரலாற்றில் ஒருவன் பெயரைச் சொல்.

ஈழப்படுகொலையை நாடு முழுவதும் கொண்டு போனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். எங்களுக்கு ஓட்டு கிடைக்காமல் இருக்கலாம், ஜெயிக்காமல் இருக்கலாம். ஆனால் தமிழர் உரிமை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான கடமையை நாங்கள் செய்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

More News >>