பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு..
பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். மேலும், அவரது செயல்களால் இந்தியா பெருமிதம் கொள்வதாக மோடி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றும் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் பொருளாதார ஆய்வாளர் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு இந்தாண்டு நோபல் பரிசு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. இவர்கள் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை வகுத்தவர்கள் என்ற காரணத்திற்காக நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி அளித்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், பெரிய கம்பெனிகளுக்கு வரிச் சலுகை அளிப்பதை விட்டு விட்டு, கிராமப்புற ஏழைகளுக்கான வருமானத்தை உயர்த்தினால் மட்டுமே பொருளாதாரத்தை சீர்படுத்த முடியும் என்று கூறி, மத்திய அரசையும் விமர்சித்தார். இதையடுத்து, பாஜகவினர் அவரை இடதுசாரி சிந்தனையாளர் என்றும், நோபல் பரிசு இவருக்கு கொடுத்ததே வெளிநாடுகளின் சதி என்றும் சமூக ஊடகங்களில் கடுமையான பிரச்சாரங்கள் செய்து வந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். இருவரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக உரையாடினர். இதன்பின், பிரதமர் மோடி அந்த சந்திப்பு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அவர் கூறியிருப்பதாவது:
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியுடன் அருமையான சந்திப்பு. மக்களுக்கு அதிகாரம் அளித்தல் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தது. நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் ஆரோக்கியமான ஆலோசனை நடத்தினோம். அபிஜித்தின் செயல்பாடுகளுக்காக இந்திய பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்கால செயல்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.