அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக ஸ்டாலின் சேர்ப்பு..

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அந்த நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட், நூலகத்தை இடமாற்றம் செய்யத் தடை விதித்தது.

அதன்பின், அந்த நூலகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்று ஐகோர்ட்டில் மீண்டும் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், பராமரிப்பு பணிகளை செய்வதற்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதன்பிறகு, அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.22) காலையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்திற்கு சென்றார். அவருடன் திமுக முக்கிய நிர்வாகிகள் எ.வ.வேலு, ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு நூலகத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

பின்னர், அவர் அந்த நூலகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். சிறிது நேரம் நூலகத்தைச் சுற்றிப் பார்த்த பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

More News >>