நான் ஓடிப் போகவில்லை.. கல்கி பகவான் பேச்சு..

நான் நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை என்று சாமியார் கல்கி பகவான் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

கடந்த வாரம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கல்கி பகவான் ஆசிரமங்கள் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா நடத்தும் கம்பெனிகளில் தொடர்ந்து 3 நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.409 கோடி நன்கொடைகளுக்கு ரசீதுகள் தரப்பட்டிருப்பதும், ஆனால் அவை வருமான வரி துறைக்கு கணக்குகள் காட்டப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ரூ43.90 கோடி ரொக்கம், 25 லட்சம் அமெரிக்க டாலர்(ரூபாயில் 18கோடி), 88 கிலோ நகைகள்(மதிப்பு ரூ.26 கோடி), 1271 கேரட் வைரங்கள்(மதிப்பு ரூ.5 கோடி) மற்றும் பல சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பல சொத்துகள் இருப்பதை ஆவணங்கள் மூலம் பார்த்து தெரிந்து கொண்ட வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பல டிரஸ்ட்கள், ஒயிட் லோட்டஸ், கோல்டன் லோட்டஸ், ட்ரீம் வியூ, புளூ வாட்டர் ஆகிய கட்டுமான நிறுவனங்கள் உள்பட கம்பெனிகளை கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா நடத்தி வருகிறார். அத்தனை கம்பெனிகளிலும் வருமான வரி ஏய்ப்புகள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்கி பகவான் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், கல்கி பகவான் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கல்கி பகவான் சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் நாட்டை விட்டு ஓடிப் போகவில்லை. நான் இங்கேயே தான் இருக்கிறேன். நான் ஓடிப் போனதாக வருமான வரித் துறையோ, அரசோ சொல்லவே இல்லை. ஆனால் தவறான செய்திகள் வெளியாகிறது. எனது மகன் கம்பெனிகளில்தான் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர் என்று கூறியுள்ளார்.

More News >>