மேட்டூர் அணை நிரம்புகிறது.. வெள்ள அபாய எச்சரிக்கை..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்) அணைகள் நிரம்பின. இதனால் அந்த அணைகளில் இருந்து சுமார் 3 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரவே கடந்த மாதம் 7ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அதன்பிறகு, நீர்வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டது. இதன்பின், அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால், 2-வது முறையாக கடந்த 24-ம் தேதி அணை நிரம்பியது.

இதன்பின், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்தது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த 18-ம் தேதி முதல் 34 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து காணப்படுகிறது. அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், காவிரி நதிக்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டக் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>