மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்.. நாளை வாக்கு எண்ணிக்கை.. கணிப்புகளில் முந்திய பாஜக..

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை பொதுத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 2 மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் பட்நாவிஸ் தலைமையில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளிலும் கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த முறையும் பாஜக-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக-சிவசேனா கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது. டைம்ஸ்நவ் வெளியிட்ட கணிப்பில் பாஜக அணி 230, காங்கிரஸ் அணி 48, மற்றவை 10 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே கணிப்பில் பாஜக அணி 166-194, காங்கிரஸ் அணி 72-90, மற்றவை 22-34 இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருக்கிறது. நியூஸ் 18 கணிப்பில் பாஜக அணி 244, காங்கிரஸ் அணி 39, மற்றவை 5 என்றும் ஏபிபி சி ஓட்டர் கணிப்பில் பாஜக அணி 210, காங்கிரஸ் அணி 63, மற்றவை 15 என்றும், நியூஸ் எக்ஸ் கணிப்பில் பாஜக அணி 188-210, காங்கிரஸ் அணி 74-89, மற்றவை 6-10 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள 90 தொகுதிகளுக்கும் கடந்்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு டைம்ஸ் நவ் கணிப்பில் பாஜக 71, காங்கிரஸ் 11, மற்றவை 8 என்றும், நியூஸ்18 கணிப்பில் பாஜக 75, காங்கிரஸ் 10, மற்றவை 5 என்றும் கூறப்பட்டுள்ளது. ஏ.பி.பி. சி ஓட்டர் கணிப்பில் பாஜக 70, காங்கிரஸ் 8, மற்றவை 12 என்றும், நியூஸ் எக்ஸ் கணிப்பில் பாஜக 75-80, காங்கிரஸ் 9-12, மற்றவை 4 என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்தியா டுடே-ஆக்ஸிஸ் கணிப்பில் மட்டும் ஹரியானாவில் இழுபறி ஏற்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. பாஜக 32-44 இடங்கள், காங்கிரஸ் 30-42 இடங்கள் என்று இழுபறியாக வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 11 மணியளவில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற தெரிய வரலாம்.

More News >>