டெல்லியில் 40 லட்சம் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு அறிவிப்பு..
டெல்லியில் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு இடஉரிமையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் புதனன்று(அக்.23) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில் அங்கீகாரம் பெறாமல் கட்டப்பட்ட காலனிகளில் குடியிருக்கும் மக்களுக்கு சுமார் 40 லட்சம் மனைகளுக்கு இடஉரிமையை அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு இடம் மற்றும் தனியார் இடமாக இருந்தாலும் அவற்றிற்கு இடஉரிமை(பட்டா) வழங்கப்படும். நவம்பர் 18ம் தேதி தொடங்கவுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கான சட்டமசோதா நிறைவேற்றப்படும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு. சைனிக் பார்ம்ஸ், மகேந்திரு என்கிளேவ், ஆனந்த்ராம் டயரீஸ் ஆகியவற்றிக்கு அந்த சலுகை கிடையாது.
இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறுகையில், இந்த காலனிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் விஷயத்தில் டெல்லி முதல்வரிடம் விரைவில் கணக்கெடுப்பு நடத்துமாறு நாங்கள் கூறியிருந்தோம். ஆனால், அதற்கான பணிகளை அந்த அரசாங்கம் சரியாக மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அதே சமயம், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லி அரசு கடந்த ஜூலையில் அனுப்பிய திட்டத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு விதிமுறைகளை வகுத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.