கமல்ஹாசனுக்கு சகுனம் சரில்லை கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார் - ராஜேந்திர பாலாஜி தாக்கு
கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரில்லை. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நாளை [பிப்ரவரி 21-ஆம் தேதி] தனது கட்சிப் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்து, தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். அதன் தொடர்ச்சியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், ரஜினிக்காந்த் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசன் இருவரும் சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், “கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு ஆரம்பத்திலேயே சகுனம் சரில்லை. கட்சி நடத்துவோரிடம் கமல் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார். அரசியல் கட்சிகளிடம் கமல் ஆதரவு கோருவது கேலிக்கூத்தாக முடியும். எத்தனை கமல் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
வயதை கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ரஜினி வெளிப்படைத்தன்மை கொண்டவர் என்பதால், கட்சி தொடங்கும் கமலை வாழ்த்தியிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.