அரியானா தேர்தலில் இழுபறி.. தொங்கு சட்டசபை அமையுமா?

அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தாலும் மெஜாரிட்டி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியை பாஜக அமைக்கும்.

அரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள 90 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. டைம்ஸ் நவ் கணிப்பில் பாஜக 71, காங்கிரஸ் 11, மற்றவை 8 என்றும், நியூஸ்18 கணிப்பில் பாஜக 75, காங்கிரஸ் 10, மற்றவை 5 என்றும் கூறப்பட்டது. ஏ.பி.பி. சி ஓட்டர் கணிப்பில் பாஜக 70, காங்கிரஸ் 8, மற்றவை 12 என்றும், நியூஸ் எக்ஸ் கணிப்பில் பாஜக 75-80, காங்கிரஸ் 9-12, மற்றவை 4 என்றும் கூறப்பட்டது.

அதேசமயம், இந்தியா டுடே-ஆக்ஸிஸ் கணிப்பில் மட்டும் பாஜக, காங்கிரஸ் இடையே இழுபறி ஏற்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக 32-44 இடங்கள், காங்கிரஸ் 30-42 இடங்கள் என்று இழுபறியாக வரலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்த. அதன்பின், காங்கிரஸ் நெருக்கி பல இடங்களில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது. பகல் 12 மணியளவில் பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், மற்றவை 19 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆட்சியமைக்க 46 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போது பாஜகவுக்கு 39 இடங்களே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடைசி சுற்று முடிவில் 46 இடங்களை பாஜக கைப்பற்றி மீண்டும் மெஜாரிட்டி ஆட்சி அமைக்குமா என்பது தெரியவில்லை. ஒரு வேளை, தொங்கு சட்டசபை அமைந்து, பாஜகவுக்கு மெஜாரிட்டி பெற ஐந்தாறு இடங்கள் தேைவப்பட்டால் காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளின் ஆதரவில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>