உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும்.. முதலமைச்சர் அறிவிப்பு
வருங்காலத்திலும் அதிமுக கூட்டணி நீடிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, காங்கிரஸ் கூட்டணி தோற்றுள்ளது.
அதிமுக 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கும் போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு தொண்டர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த 2 தொகுதி இடைத்தேர்தல்களில் கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதுவே வெற்றிக்கு முக்கிய காரணம். 2 தொகுதிகளிலும் மக்கள் அதிமுகவுக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இனி வருங்காலத்திலும் மற்ற கட்சிகளுடனான அதிமுகவின் கூட்டணி தொடரும். இடைத்தேர்தலில் உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலின் போதும் மக்களுக்கு உண்மையைத்தான் சொன்னோம். அப்போது மக்கள் எங்களை நம்பவில்லை. தற்போது உண்மையை அறிந்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை இடைத்தேர்தல் வெற்றி நிரூபித்துள்ளது. பொய்யை நம்பியதால் திமுக 2 தொகுதிகளையும் இழந்து விட்டது. முரசொலி அலுவலகக் கட்டடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால், அரசு அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.