ஓசூர், கிருஷ்ணகிரியில் விஜய் மன்றத்தினர் அராஜகம்.. வன்முறை.. பிகில் காட்சிகள் ரத்து..
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரின் அராஜகத்தால், ஓசூரில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்தின் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் இறங்கினர்.
தீபாவளியையொட்டி, தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று காலை வெளியிடப்பட்டது. அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு முதல் நாள் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்தது.
இதையடுத்து, பல தியேட்டர்களில் இன்று அதிகாலை காட்சிகள் நடந்தன. இந்த சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்தினர் பெற்று கொண்டு ரூ.1000, ரூ.2000 விலைக்கு விற்றனர். ரூ.80 டிக்கெட்டை தியேட்டர் உரிமையாளர்கள் ரூ.200, ரூ.300க்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அளிப்பதாகவும் அவர்கள் இப்படி ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் பார்ப்பதாகவும் கூறப்பட்டது. முன்பெல்லாம் ரசிகர் மன்றத்தினர் பெரிய கட்-அவுட், பேனர்கள் வைப்பார்கள். அதற்கு இந்த பணம் தேவைப்படுவதாக கூறினார்கள். ஆனால், இந்த முறை கட்-அவுட், பேனர் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனாலும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இந்த சமயத்தில் பணம் சம்பாதிப்பதற்காக தியேட்டர் உரிமையாளர்களிடம் சண்டை போட்டு மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஓசூரில் ராகவேந்திரா, ஸ்ரீபாலாஜி, ஸ்ரீலட்சுமிதேவி ஆகிய 3 தியேட்டர்களில் இன்று அதிகாலையில் பிகில் படத்தின் சிறப்பு காட்சிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரின் தொல்லை தாங்க முடியாமல் இன்று நான்கு காட்சிகளுமே ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை ஒரு தியேட்டரில் அறிவிப்பாக போர்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.
இது பற்றி, தியேட்டர் நிர்வாகிகளிடம் பேசிய போது, இந்த மாவட்டத்தில் ரசிகர் மன்றத் தலைவர் வடிவேலு, செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட சில நிர்வாகிகள், முதல் நாள் காட்சிகளுக்கு 500 டிக்கெட்டுகள் வரை கேட்டார்கள். அதுவும் தியேட்டரில் விற்கும் ரூ.80 கட்டணத்துக்கே கேட்டார்கள்.
ஓசூர் சென்டரில் எப்போதும் நிறைய கலெக்ஷன் ஆகும். காரணம், பெங்களூருவில் உள்ள தமிழர்கள், அங்குள்ள மால்களில் டிக்கெட் கிடைக்காமல் இங்கு வருவார்கள். அதனால், பெங்களூரு தமிழர்களாலேயே ஓசூரில் படம் வெளியாகி சில நாட்கள் நல்ல கலெக்ஷன் ஆகும். அதனால், இதில் பணம் சம்பாதிக்க ரசிகர் மன்றத்தினரும், தியேட்டர் உரிமையாளர்களும் சண்டை போடுகின்றனர்.
அதே போல், முதல் நாள் காட்சிகளில் ரசிகர் மன்றத்தினர் வந்து எந்த கலாட்டாவில் ஈடுபட்டாலும் தியேட்டர் உரிமையாளர்கள்தான் பொறுப்பு என்று காவல் துறையினர் மிரட்டுகிறார்கள். ஆனால், ரசிகர் மன்றத்தினர் என்ன அராஜகம் செய்தாலும் அவர்களை கண்டிக்க காவல் துறையினரே யோசிக்கிறார்கள். இதனால்தான், பிகில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், நடிகர் விஜய் தலையிட்டு ரசிகர் மன்ற நிர்வாகிகளை கட்டுப்படுத்தாவிட்டால், வருங்காலத்தில் அவருக்கே அது அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்றார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். ஐந்து ரோடு ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த சிக்னல் லைட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், போலீசாரின் ஒலிபெருக்கிகள், தீபாவளி பாதுகாப்புக்காக காவல்துறையினர் அமைத்திருந்த மரக்கட்டை மேடை ஆகியவை நாசமாகின. நகராட்சி தண்ணீர் தொட்டியும் உடைக்கப்பட்டது. கடைகளின் போர்டுகள், பேனர்கள் கிழித்து தீ வைக்கப்பட்டன.
இதையடுத்து, அதிரடி காவல் படையினர் அங்கு வந்து தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.