பாஜகவின் அகந்தையால் மகாராஷ்டிராவில் வாக்குகள் சரிவு.. சிவசேனா கடும் தாக்கு..

பாஜகவின் அகந்தையால்தான் மகாராஷ்டிராவில் அக்கட்சியின் வாக்குகள் சரிந்துள்ளது என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டு பெற்ற அளவுக்கு கூட இடங்களை பெற முடியவில்லை. 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. தேர்தலுக்கு பின், இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்த முறை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தும் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி அமைக்காமல் இருந்தால், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கலாம்.

இந்த நிலையில், பாஜகவின் அகங்காரம்தான் வாக்குகள் சரிவுக்கு காரணம் என்றும், எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக ஒழித்து விட முடியாது என்றும் சிவசேனா கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தேர்தல் நேரத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்தது. அந்த கட்சியில் இருப்பவர்களை இழுத்தது. அதனால், பவாரின் தேசியவாத காங்கிரஸ் அழிந்து விட்டது, இனி அக்கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், அந்த கட்சி கடந்த முறையை விட அதிக இடங்களை பெற்றிருக்கிறது. 50 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியிருக்கிறது. அரசியலில் என்றுமே எதிர்க்கட்சிகளை ஒழித்து விட முடியாது என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.

சதாரா லோக்சபா தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியவாத கட்சியின் சார்பில் போட்டியிட்டு பாஜகவை வென்ற உதயன்ராஜே போஸ்லேவை பாஜகவில் சேர்த்தார்கள். அதே தொகுதி இடைத்தேர்தலில் அவரை நிறுத்தினார்கள். ஆனால், மக்கள் அவரை நிராகரித்து மீண்டும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரைத்தானே வெற்றி பெற வைத்தார்கள்? அந்த சதாரா தொகுதிக்கு அமித்ஷாவும், மோடியும் வந்து பெரிய பிரச்சாரம் செய்தார்கள். சத்ரபதி சிவாஜியின் வாரிசு என்று பெருமையாக உதயன்ராஜேவை போற்றினார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜி பெயரை பயன்படுத்தி அரசியல் சந்தர்ப்பவாதம் செய்வதை மக்கள் ஏற்கவில்லை.

தலைவரே இல்லாத காங்கிரஸ் கட்சியும் 44 இடங்களில் வென்றிருக்கிறது. இதிலிருந்து மக்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் அதிகார மமதையை, அகங்காரத்தை மக்கள் விரும்பவில்லை.

இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் கடுமையாக எழுதப்பட்டிருக்கிறது. இந்த பத்திரிகையில் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் கருத்துதான் தலையங்கமாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>