மகாராஷ்டிரா, அரியானாவில் 15 அமைச்சர்கள் தோல்வி..
மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபைத் தேர்தல்கள் கடந்த அக்.21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அக்.24ம் தேதி எண்ணப்பட்டது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தலைமையில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியும், அரியானாவில் முதலமைச்சர் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சியும் ஏற்கனவே நடைபெற்றது.
மகாராஷ்டிரா தேர்தலில் கடந்த முறையை விட பாஜக சிவசேனா கூட்டணி குறைந்த இடங்களை பெற்றாலும், ஆட்சியை தக்க வைத்து கொண்டது. அதே போல், அரியானாவிலும் பாஜகவுக்கு கடந்த முறையை விட எண்ணிக்கை குறைந்ததுடன், மெஜாரிட்டியும் கிடைக்கவில்லை. இதனால், அங்கு ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற வேண்டியுள்ளது. இருமாநிலங்களிலும் அமோக வெற்றி பெறுவோம் என்று பாஜக நினைத்திருந்தது.
அதிலும் காஷ்மீர் விவகாரம், முத்தலாக் போன்ற விஷயங்களால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்து மகாராஷ்டிராவில் பிரதமர் 10 முறையும், அமித்ஷா 20 முறையும் பிரச்சாரம் செய்தனர். எப்படியும் தோற்கப் போகிறோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மிகவும் அலட்சியமாக ஓரிரு முறை மட்டுமே பிரச்சாரம் செய்தார். தேர்தல் நடைபெறும் நேரத்தில் ராகுல் வெளிநாட்டுக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார் என்று அமித்ஷா கிண்டல் செய்தார். அப்படியிருந்தும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையை விட அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த அனில் போன்டே, பங்கஜ் முன்டே, பரிநய்பியூக், ஜெய்தத்தா சிர்சாகர், அர்ஜுன் கோட்கர், ராம்ஷிண்டே, பாலபெக்டே, விஜய் சிவ்தாரே ஆகிய 8 பேர் தேர்தலில் தோல்வியைத் தழுவினர்.
அதே போல், அரியானாவில் கட்டார் அரசில் அமைச்சர்களாக இருந்த ராம்பிலாஸ்சர்மா, கேப்டன் அபிமன்யு, ஓம்பிரகாஷ் தங்கர், மணீஷ்குரோவர், கவிதா ஜெயின், கிருஷ்ணன்லால் பன்வார், கிருஷ்ணன்குமார் பேடி ஆகிய 7 பேர் தேர்தலில் தோல்வியடைந்தனர். அது மட்டுமல்ல. மாநில பாஜக தலைவர் சுபாஷ் பரலா, ஜனநாயக ஜனதா கட்சியின் தேவேந்தர் பாப்ளியிடம் 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். கட்டார் அமைச்சரவையில் அனில்விஜ், பன்வாரிலால் ஆகிய 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.