சேலத்தில் எடப்பாடியுடன் அ.ம.மு.க. புகழேந்தி சந்திப்பு.. அதிமுகவில் சேருகிறாரா?
அ.ம.மு.க.வில் அதிருப்தியடைந்து தினகரனிடம் ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சேலத்தில் முகாமிட்டிருக்கிறார். அவரை அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி சந்தித்து பேசினார். அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து, டி.டி.வி. தினகரன் மீதான தனது அதிருப்தியை அவர்களுடன் புகழேந்தி பேசிய வீடியோ சமீபத்தில் வெளியானது. அதிலிருந்து தினகரன் மீது குற்றச்சாட்டுகள் கூறி விட்டு ஒதுங்கியிருக்கிறார். ஆனாலும், அவரை கட்சியில் இருந்து தினகரனும் நீக்கவில்லை.
இந்நிலையில், முதலமைச்சரை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் புகழேந்தி கூறியதாவது:
சேலத்தில் எனது மாமியார் வீடு இருக்கிறது. இங்கு வந்திருந்த சமயத்தில் முதலமைச்சரைப் பார்த்து இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தேன். முதலமைச்சர் எனது நீண்ட கால நண்பர். அந்த முறையில் சந்தித்தேன். நான் அதிமுகவில் சேரவில்லை. அப்படி சேருவதாக இருந்தால், உங்களிடம் சொல்லி விட்ட சேருவேன்.
சசிகலா சிறைக்கு போகும் முன்பு, 2 பேரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார். அவர் அதை சிறப்பாக செய்து வீறு நடை போட்டு சரித்திரம் படைத்து விட்டார். இன்னொருவரிடம் துணை பொதுச் செயலாளர் பதவியை அளித்தார். அந்தப் பதவி இப்போது எப்படி இருக்கிறது? நான் அவர்(தினகரன்) பெயரைக் கூட சொல்ல மாட்டேன். அவர் என் பெயரைக் கூட சொல்ல நேரமில்ைல என்று சொன்னாரே, அதே போல்தான் எனக்கும் நேரமில்லை. நாங்கள் அவர் பின்னால் கொடிபிடித்து அலைந்தோம். அவர் நன்றி மறந்து விட்டார்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.