பிரபுதேவா எங்கள் சொத்து... சொந்தம் கொண்டாடும் சல்மான்கான்..

0இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3 ஆவது பாகமாக தபாங் 3 உருவாகியிருக்கிறது. இதை நடிகர் பிரபுதேவா இயக்கி உள்ளார். வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. சோனாக்ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

வீடியோ கான்ஃபரஸிங் மூலம் தபாங் 3 படக்குழு மும்பையில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்கள் மற்றும், பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது பேசிய பிரபுதேவா, இப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்த படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம்' என்றார்.

நடிகர் சல்மான்கான் பேசும்போது, தென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது இந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே.ஜி.எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன். அவரது தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இது தென்னிந்திய படம் போல் தான்.

பிரபுதேவா எங்களுடைய சொத்து. அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார்'. என்றார்.

More News >>