பிகில் ஓடும் தியேட்டரில் விஜய் மெழுகு சிலை.. ஐகோர்ட்டில் ரசிகர் மனு..

பிகில் படம் ஓடும் தியேட்டரில் விஜய் மெழுகு சிலை வைப்பதற்கு போலீஸ் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் ரசிகர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் ஸ்ரீலட்சுமி தியேட்டரில் நடிகர் விஜய்யின் பிகில் படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர் வளாகத்தில் நடிகர் விஜய்யின் மெழுகுச் சிலையை வைத்து கொண்டாடுவதற்கு தியேட்டர் உரிமையாளரிடம் ரசிகர்கள் கேட்டனர்.

ஆனால், தியேட்டர்களில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள்தான் பொறுப்பு என்று ஏற்கனவே போலீசார் கூறியிருக்கிறார்கள். அதனால், போலீசாரின் அனுமதி பெற்று வந்தால்தான், விஜய் மெழுகு சிலையை வைக்க அனுமதிக்க முடியும் என்று தியேட்டர் நிர்வாகம் கூறிவிட்டது. ஆனால், அதற்கு அனுமதியளித்தால், புதிய கலாச்சாரம் எல்லா தியேட்டரிலும் பரவி அதுவும் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்று போலீசார் அனுமதி தர மறுத்தனர்.

இதையடுத்து, சின்னாளப்பட்டியை சேர்ந்த விஜய் ரசிகர் லட்சுமணன், இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர், சின்னாளப்பட்டி ஸ்ரீலட்சுமி தியேட்டரில் விஜய் மெழுகு சிலையை பிகில் படம் ஓடும் நாட்கள் வரை வைத்து கொள்ள தியேட்டர் உரிமையாளர் அனுமதி தந்து விட்டார். ஆனால் போலீசார் அனுமதி தர மறுத்துள்ளனர். எனவே, தியேட்டர் வளாகத்தில் வரும் 27-ம் தேதி வரை விஜய்யின் மெழுகுச்சிலையை அமைத்து கொண்டாடுவதற்கு அனுமதி தருமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இது தொடர்பாக ஸ்ரீலட்சுமி தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை நவ.8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்குள் பிகில் படம் தியேட்டரை விட்டு போய் விடும் எனத் தெரிகிறது.

More News >>