நியூஸ்18 பத்திரிகையாளர் திருநாவுக்கரசு திடீர் மரணம்.. எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்..

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர், தினமணி ஆகிய நாளிதழ்களில் பணியாற்றி, கடைசியாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு, அக்.25ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் திருநாவுக்கரசு பணியில் இருந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அவர், அச்சு, ஊடகத் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நியூஸ் 18 தொைலக்காட்சி நிறுவனத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். திருநாவுக்கரசு ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான திருநாவுக்கரசு, பணியில் இருந்த போதே திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை, சென்னை, ஈரோடு என, பல இடங்களில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய பணி சிறப்புக்குரியது. திருநாவுக்கரசு அவர்களின மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதே போல், எஸ்டிபிஐ கட்சி தேசியத் துணை தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News >>