பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை.. துணைமுதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி
தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆள்துளை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை உடனடியாக மூடப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுர்ஜித்வில்சன் கடந்த 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான்.
குழந்தையை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என்று வரிசையாக வந்து 25ம் தேதி மாலை முதல் 4வது நாளாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக நடுக்காட்டிப்பட்டிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு(அக்.27) வந்தார். அவருடன் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்தரநாத்தும் வந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்திடம் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். குழந்தையின் பெற்றோரை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மூடப்படும் என்று தெரிவித்தார்.