உலகை அச்சுறுத்தி வந்த ஐ.எஸ். தீவிரவாத தலைவர் பாக்தாதியை கொன்றது எப்படி?

உலகையே அச்சுறுத்தி வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் குழு தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாக்தாதி எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா) தீவிரவாதிகள் அந்நாடுகளில் ஊடுருவினர். மேலும், பல நாடுகளில் பயங்கர குண்டுவெடிப்புகளை நடத்தி, உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர். சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான அமைப்பாக ஐ.எஸ். அமைப்பு கருதப்பட்டது.

இந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி, தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். பாக்தாதி கொல்லப்பட்டதாக சில சமயங்களில் செய்திகள் வெளியானாலும் அது தவறான தகவல் என்று தெரிய வந்தது. இதற்கிடையே, பயங்கரவாதச் செயல்களை தூண்டும் வகையில் பாக்தாதி பேசிய ஆடியோக்களை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான நேசநாடுகள் படையினர், சிரியாவில் முகாமிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர் தொடுத்து அந்த அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகளை மீட்டு வந்தனர். இதற்கிடையே, இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பலர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ், அமைப்பினரே காரணம் என்று புலனாய்வில் தெரிய வந்தது. இதன்பின், பாக்தாதி பேசும் வீடியோ ஒன்று, கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் இலங்கை தாக்குதலுக்கு பொறுப்பேற்று பேசியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க படைகளின் தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக நேற்று(அக்.27) தகவல்கள் வெளியாகின. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மிகப் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது என்று பதிவிட்டிருந்தார். அப்போதே அமெரிக்கா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சிரியாவில் பல இடங்களில் தலைமறைவாக இருந்து வந்த பாக்தாதி பற்றிய தகவல்களை, அமெரிக்க கூட்டுப்படைகள், துருக்கி அதிகாரிகள், ஈராக் புலனாய்வு அமைப்பினர் சேகரித்து வந்தனர். பாக்தாதியின் உதவியாளர் இஸ்மாயில் எதாவி என்பவரை துருக்கி அதிகாரிகள் பிடித்து விட்டனர். அவரிடம் துருவித் துருவி விசாரித்த போது பாக்தாதியைப் பற்றிய பல தகவல்கள் கிடைத்தனர்.

இதையடுத்து, அவரை ஈராக் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்திய போது எதாதி சில தகவல்களை கொடுத்தார். பாக்தாதி, சிரியாவில் காய்கறிகளை கொண்டு செல்லும் மினிபஸ்களில் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் தப்பி வந்துள்ளார். மேலும், அவரை சுற்றி 5 முக்கிய கமாண்டர்கள் இருப்பதாக கூறி, அவர்களைப் பற்றிய தகவல்களையும் எதாதி தெரிவித்திருக்கிறார். அதே போல், பாக்தாதியின் மறைவிடங்கள் எவை என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார்.

இந்த தகவல்களை கொண்டு, ஈராக் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்தனர். அதில், இட்லிப் மாகாணத்தில் இருந்த பாக்தாதி, தனது குடும்பத்தினரை துருக்கி எல்லைக்கு இடமாற்றம் செய்ய முயற்சி மேற்கொண்ட போது, பாக்தாதியின் சரியான இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கொன்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>