உத்தவ் தாக்கரேயுடன் அக்.30ல் அமித்ஷா பேச்சு.. பாஜக-சேனா உடன்பாடு வருமா?
மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், வரும் 30ம் தேதியன்று உத்தவ் தாக்கரேயை அமித்ஷா சந்திக்கிறார்.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டில் 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.
அதற்கு பின், பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேரடியாக உத்தவ் தாக்கரேயிடம் பேசினார். அப்போது, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா ஒப்புக் கொண்டது. அதனால், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 16 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகளின்படி, பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 30ம் தேதி மும்பையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் எம்.எல்.சி. கிரிஷ் வியாஸ் கூறுகையில், வரும் 30ம் தேதி, கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இதில் தேசிய தலைவர் அமித்ஷா, மேலிடப் பார்வையாளர் சரோஜ் பாண்டே ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தின் முடிவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அமித்ஷா சந்தித்து பேசுவார். அப்போது நிச்சயமாக ஆட்சிப் பங்கீடு குறித்து முடிவு ஏற்பட்டு விடும் என்றார்.
இதற்கிடையே, பிரசார் ஜனநாய கட்சியைச் சேர்ந்த பஜ்ஜாகாடு, ராஜ்குமார் படேல் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள், ஆசிஷ்ஜெய்ஸ்வால், நரேந்திர போன்டேகர் ஆகிய 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், சிவசேனாவின் பலம் 60 ஆகியுள்ளது. அதே போல், சுயேச்சைகளில் 10 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் பலம் 115 ஆக உள்ளது. ஆனாலும் சிவசேனா ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.