மகாராஷ்டிர முதல்வர் கவர்னருடன் சந்திப்பு.. சிவசேனா தனியாக சந்திப்பு..
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர்.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும் ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டில் 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா ஒப்புக் கொண்டது.
பின்னர், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 16 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது. இதில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது.
இந்நிலையில், பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியமைப்பது பற்றியும், சிவசேனா விவகாரம் குறித்தும் பேசியிருக்கிறார்.
முன்னதாக, சிவசேனா மூத்த தலைவர் திவாகர் ரவ்தேயும், கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அவரும் பாஜகவுடன் ஆட்சிப் பங்கீடு குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது.
இந்த இருவரிடமும் பேசியது பற்றிய விவரங்களை கவர்னர் கோஷ்யாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிப்பார் என்றும் அதனடிப்படையில் அமித்ஷா, மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் 30ம் தேதி மும்பையில் நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருக்கிறார். அனேகமாக, அன்று மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.