குழந்தையை மீட்கும் முயற்சி தொடரும்.. வருவாய் ஆணையர் பேட்டி..

ஆழ்துளை கிணறில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுர்ஜித்வில்சன் கடந்த 25ம் தேதி மாலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக நடைபெற்று வருகிறது.

எனினும், கடினமான பாறை, ரிக் இயந்திரத்தில் பழுது, மழை போன்ற காரணங்களால், குழந்தையை மீட்க முடியுமா என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அந்த இடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ஆள்துளை கிணறு அருகே 2வது குழி தோண்டும் இடத்தில் கனமான பாறைகள் உள்ளன. இதனால், குழி தோண்டும் பணி மிகவும் சவாலாக உள்ளது. அதே சமயம், குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

பாறைக்கு அடியில் கரிசல் மண் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, குழிதோண்டும் பணி தொடர்ந்து நடைபெறும். இது வரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது. 98 அடி வரை குழி தோண்டப்படும். இப்பணியை முடிக்க இன்னும் 12 மணி நேரமாகும். குழந்தை சுர்ஜித் 88 அடியில்தான் உள்ளது.

குழந்தையை தொடர்ந்து கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். தவறான நம்பிக்கையை அளிக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். அதே சமயம், எக்காரணம் கொண்டும் மீட்கும் முயற்சி பாதியிலேயே கைவிடப்படாது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும்என்று தெரிவித்தார்.

More News >>