பிகில் முதல்நாள் வசூலைவிட 2வது நாள் வசூல் குறைவு... கைதி படத்துக்கு 30 சதவீதம் தியேட்டர்கள் அதிகரிப்பு..

தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்.

தீபாவளியை யொட்டி பிகில், கைதி என இரண்டு படங்கள் வெளியாகவிருந்த நிலையில் பிகில் படத்தை திரையிடுவதற்கு மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பிகில் ஓப்பனிங் தாறுமாறு தக்காளி சோறாக இருந்தது. படத்தை திரையிட தாமதமானதால் ஒரு இடத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. முதல் நாள் பிகில் படம் வசூலை 25 கோடி வசூலை அள்ளியது.

படத்திற்கு தொடக்கத்தில் பாசிடிவான விமர்சனங்கள் வந்த நிலையில் அதைத் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களும் வந்தன. யூ டி யூப் விமர்சனத்தில் பிகில் படத்தை கன்னாபின்னா வென்று விமர்சித்து எதற்காக இந்த படத்தை எடுத்தார்கள் என்று ஒரு சிலர் புலம்பித்தள்ளி விட்டனர். அதேசமயம் கார்த்தியின் கைதி படத்தை தூக்கி வைத்து பாராட்டினார்கள்.

பிகில் படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனம், கைதிக்கு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் தற்போது வசூலில் மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறதாம். அதாவது பிகில் படத்தின் 2வது நாள் வசூல் 16 கோடி ரூபாய் ஆனதாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளில் பிகில் படத்துக்கு கூட்டம் பெருமளவு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் கைதி படத்திற்கு தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை 30% கூடுதலாகியிருக்கிறதாம்.பிகில். கைதி படங்களுக்கு கூட்டம் அதிகரித் தாலும் குறைந்தாலும் கடைசியாக வசூல் மன நிறைவாகவே இருக்கிறது என்கிறது பட வட்டாரங்கள்.

இதற்கிடையில் கேரளாவில் வெளியான பிகில் ரூ 10 கோடி வசூல் செய்து விட்டதாம். அதன்படி படத்தை வாங்கிய விலையை விட கடந்து 3 நாட்களில் லாபத்தை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>