டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட ராணுவ மோப்ப நாய் படம்.. பாக்தாதி கொலைக்கு உதவிய நாய்
உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. இந்த ஆபரேஷனில் முக்கிய பணியாற்றிய மோப்ப நாய் படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பினர் உலகம் முழுவதும் குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியை கொல்வதற்கு அமெரிக்கா குறி வைத்து வந்தது. இந்நிலையில், சிரியாவில் பாக்தாதி தலைமறைவாக இருந்த பங்களாவை அமெரிக்க புலனாய்வு படைகள் கண்டுபிடித்தன. கடந்த கடந்த சனிக்கிழமை(அக்.26), அங்கு மிகப் பெரிய ரெய்டு நடத்தி பாக்தாதியை கொன்றனர்.
இந்த ரெய்டின் போது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த மோப்பநாய்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, பாக்தாதியை பாதாள அறைக்குள் துரத்திச் சென்று வீழ்த்திய ஒரு நாய், அந்த சம்பவத்தில் காயமுற்றது. தற்போது அந்த நாய், அதன் காவலரிடம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த மோப்ப நாயின் படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை பிடிக்கும் பணியிலும், அவரை கொல்லும் பணியிலும் மிகப் பெரிய பங்கு வகித்தது இந்த நாய். இதன் பெயரை நாங்கள் வெளியிடவில்லை. மிகவும் அற்புதமான ஆற்றல் படைத்தது இந்த நாய் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லேய் கூறுகையில், பாக்தாதியைப் பிடிப்பதற்கான ரெய்டு நடந்த போது இந்த மோப்ப நாய் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதற்கு லேசான காயம் ஏற்பட்டதால் அதன் பராமரிப்பு காவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பாதுகாப்பு கருதி, பெயரை வெளியிடவில்லை என்றார்.
அமெரிக்கப் போர் நாய்கள் சங்கத் தலைவர் ரோன் எய்லோ கூறுகையில், இது பெல்ஜியன் நோயிஸ் வகை நாய். இந்த ரக நாய்கள் மிகவும் புத்திசாலித்தனமானவை. மேலும், கமாண்ட் கொடுத்தவுடனே வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்படும் என்றார்.