சுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி ஆகியோரின் 2 வயது குழந்தை சுஜித்வில்சன் கடந்த 25ம் தேதி காலையில் வீட்டுக்கு வெளியே உள்ள நிலத்தில் உள்ள விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான்.
அவனை மீட்கும் பணியில் பல்வேறு மீட்பு படையினர் தொடர்ந்து 82 மணி நேரம் போராடினர். இறுதியில் இன்று(அக்.29) அதிகாலையில்் சுஜித் சடலமாகவே மீட்கப்பட்டான். பின், குழந்தை உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. காலை 7 மணியளவில் பாதிரியார்கள் வந்து கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்னைகளுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி மற்றும் கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 4 நாட்களாக மீட்பு பணியை கவனித்து வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் வேதனையுடன் பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு போட்டார். அதில், தான் மட்டுமல்ல, இந்த உலகமே தன் பிள்ளையாக நினைத்த சுஜித்தின் அழுகுரல், இன்னும் தன்னுள் ஒலிக்கிறது என்றும், தன் மனம் வலிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் உணவு, உறக்கமின்றி இரவு பகலாய் இமைமூடாமல் உழைத்தோம் என்றும், இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில், 82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 2 வயது சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. குழந்தை இறந்து விட்டான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுஜித்தை உயிருடன் மீட்க தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை குறை கூற முடியாது. ஆனாலும் சிறுவனைக் காப்பாற்ற முடியாதது சோகமே. இனியும் இப்படி ஒரு சோகம் நிகழாத அளவுக்கு இத்தகைய சூழல்களை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களும், கருவிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதே போல், சுஜித் மறைவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திமுக எம்.பி. கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.