இந்தியா, சவுதி உறவு கொள்கை ரீதியானது.. பிரதமர் மோடி பேட்டி..
சவுதி அரேபியாவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, கொள்கைரீதியாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு நேற்று(அக்.28) சென்றார். அங்கு அவருக்கு நேற்றிரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி மன்னா் சல்மான்பின் அப்துல்லாசிஸ், இளவரசா் முகமதுபின் சல்மான் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறாா். இந்தியாவில் எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சவுதி அரேபியா முதலீடு செய்யவிருக்கிறது. இதையொட்டி, இந்தியா-சவூதி அரேபியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.
மேலும், சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் எதிா்கால முதலீடுகள் தொடர்பான சர்வதேச பொருளாதார மாநாடு நாளை(அக்.30) முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவில் அடுத்தது என்ன? என்று தலைப்பில் பிரதமா் நரேந்திர மோடி பேசுகிறார்.
இந்நிலையில், அரபு நியூஸ் என்ற அந்நாட்டு ஊடகத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியா, ஈராக்கிற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவில் இருந்துதான் அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்தியா 2018-19ல் மொத்தம் 207 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. இதில், 40 மில்லியன் டன் சவுதியில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவும், சவுதியும் வாங்குபவர்-விற்பவர் என்ற உறவை கடந்து, பாதுகாப்பு உள்பட பல்வேறு கொள்கைரீதியிலான உறவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் எண்ணெய், எரிவாயு துறைகளில் சவுதி நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனஎன்று தெரிவித்தார்.