பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழா, 57 குருபூஜை விழா, பசும்பொன்னில் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று காலை மதுரைக்கு வந்தனர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன்னிற்கு வந்தனர். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. 1979-ம் ஆண்டு முதல் தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்றார்.