காஷ்மீர் தொழிலாளர்கள் கொலை.. ஐரோப்பிய எம்.பி.க்கள் கவலை..
ஜம்மு காஷ்மீரில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழுவினர், பஞ்சாயத்து பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். தீவிரவாதிகளால் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு அவர்கள் கவலை தெரிவித்தனர்.
காஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து நேரில் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்கள் 23 பேர் கொண்ட குழுவினர் நேற்று(அக்.29) வந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் ராணுவ தலைமை அலுவலகத்தில் வந்து தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், போலீஸ் டிஜிபி தில்பக்சிங் ஆகியோரிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரநிதிகள், ஐரோப்பிய எம்.பி.க்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களிடம் காஷ்மீர் பிரச்னைகள் பற்றி எம்.பி.க்கள் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி. விர்ஜினி ஜோரான் கூறுகையில், நாங்கள் காஷ்மீர் பிரதிநிதிகளுடன் உரையாடியதால் மகிழ்ச்சி அடைந்தோம். தொழில், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தோம் என்றார்.
இதற்கிடையே, காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் உள்ள கட்ராசூ என்ற கிராமத்தில் 6 வௌிமாநில தொழிலாளர்களை, தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்திருந்தனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஐரோப்பிய எம்.பி.க்கள், தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
மேலும், இந்தியாவின் அரசியலில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், காஷ்மீரில் பள்ளிகள் திறப்பு, ஊழல் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினோம் என்றும் ஐரோப்பிய எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள், காஷ்மீரில் உள்ள புகழ் பெற்ற தால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், இந்திய அரசின் நேரடி அழைப்பு இல்லாமல், ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் அவர்கள் ஏதோ உள்நோக்கத்துடன் அழைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.