ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்? பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை..
ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்? இது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க முயலும் சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்று பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள நிலவரம் குறித்து நேரில் பார்வையிடுவதற்கு ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த எம்.பி.க்கள் 23 பேர் கொண்ட குழுவினர் நேற்று(அக்.29) வந்தனர். அவர்கள் ஸ்ரீநகரில் ராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர், மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், போலீஸ் டிஜிபி தில்பக்சிங் ஆகியோரிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கிராம, நகராட்சி பிரநிதிகள், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களிடம் காஷ்மீர் பிரச்னைகள் பற்றி எம்.பி.க்கள் கேட்டறிந்தனர். 2வது நாளாக ஐரோப்பிய குழு காஷ்மீரில் சுற்றி வருகிறது.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் பாஜகவிடம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் கேட்டு சிவசேனா சண்டை போட்டு வருகிறது. இதனால், அங்கு பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா நாளிதழில் இன்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில், ஜம்மு காஷ்மீரில் சகஜநிைல திரும்பி விட்டதாக மத்திய அரசு கூறியது. அப்படியானால், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை இப்போது அழைத்து செல்ல வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? மத்திய பாஜக அரசின் இந்த செயல், எதிர்க்கட்சிகளின் வாதத்திற்குத்தான் வலு சேர்க்கும். காஷ்மீர் பிரச்னை உள்நாட்டு பிரச்னை. ஆனால், இதை சர்வதேசப் பிரச்னையாக்க முயலும் சக்திகளுக்கு இந்த ஐரோப்பிய யூனியன் குழு வருகை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அரசை எச்சரித்துள்ளது.