ஆண், பெண் திருமண வயது.. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், பல்வேறு பொது நலன் வழக்குகளை தொடுத்து வருபவர். அவர் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 15, 21 ஆகியவற்றுக்கு முரணானது. உலகம் முழுவதும் 125 நாடுகளில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே திருமண வயதுதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இருபாலருக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டது. இம்மனு தொடர்பாக விளக்கம் கொடுக்குமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இன்று(அக்.30) இந்த வழக்கு நீதிபதிகள் டி.என்.படேல், ஹரிசங்கர் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.