இந்தியாவை ஆதரித்தால் ஏவுகணை தாக்குதல்.. பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்..

இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படு்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதனால், காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் பாகிஸ்தான் விஷமத்தனமான வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்க பாகிஸ்தான் முயன்றது. மேலும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை செய்தது. ஆனால், உலக நாடுகள் அதை பொருட்படுத்தவில்லை. காஷ்மீர் பிரச்னை, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற இந்திய நிலைப்பாட்டில் தலையிட எந்த நாடும் விரும்பவில்லை.

இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார்கள். அந்நாட்டு அமைச்சர் அலிஅமீன் கன்டாபூர் ஒரு பேட்டியில், காஷ்மீர் விவகாரத்தால் பதற்றம் ஏற்பட்டால் இந்தியாவுடன் போர் ஏற்படும். அப்போது இந்தியாவை ஆதரிக்கும் நாடுகளை பாகிஸ்தான் எதிரியாக பார்க்கும். அப்போது இந்தியா மீது நடத்தும் ஏவுகணை தாக்குதலை அந்த நாடுகள் மீதும் நடத்துவோம் என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் இந்த வீடியோவை ட்வீட் செய்துள்ளார். இது உலக அரங்கில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News >>