அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்
ராமநாதபுரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் இனிதே தொடங்கி உள்ளார்.
தமிழகத்தில், நடிகர் கமல் ஹாசன் அரசியலில் களமிறங்கப் போவதாக அறிவித்தது முதல் பரபரப்பு தொடங்கியது. அதன் பிறகு, தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்த கமல் வரும் பிப்ரவரி 21ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும், அன்று கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கான ஆயத்தப்பணிகளையும் கமல் தொடங்கினார். மேலும், அரசியல் பணயத்தின் விவரங்களை வெளியிட்ட கமல் அடுத்ததாக தலைவர்களை சந்திக்கும் அதிரடி செயலில் ஈடுபட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு முதல் நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்தார். தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு தனக்கு பிடித்தமானவர்களை சந்தித்து வருவதாக கமல் தெரிவித்தார்.
இந்நிலையில், கமல் அறிவித்ததுபோல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார்.
இன்று காலை, அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமலை, கலாம் பேரன் சலீம் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது, அப்துல் கலாம் புகைப்படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கினார். இதனை கமல் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், வீட்டின் உள்ளே அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். அப்போது, அவர் கமலுக்கு பொன்னாடை போர்த்தினார்.
இதன் பிறகு, அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல திட்டமிட்டிருந்த கமலுக்கு மாவட்ட கல்வித்துறை அனுமதி மறுத்ததை அடுத்து இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பொது மக்களிடையே உரையாற்ற இருக்கும் கமல், முன்பாக தனது கட்சிப் பெயர், கொடி, கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிக்க இருக்கிறார்.