சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்..

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவி வகித்து வந்தார். அவரை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம்(மூத்த நீதிபதிகள் குழு), மேகாலயா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்து விட்டு, அங்கு தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றியது.

ஐகோர்ட் தலைமை நீதிபதிகளில் மூத்த நீதிபதி தஹில்ரமானி. 70க்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இவரை நான்கைந்து நீதிபதிகளை கொண்ட சிறிய மேகாலயா மாநில ஐகோர்ட்டுக்கு இடம் மாற்றம் செய்தது இவருக்கு அதிருப்தியை கொடுத்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 6ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டல் மாற்றத்தையும் கொலிஜியம் ரத்து செய்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தற்போது பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள அமரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலிஜியத்தின் பரிந்துரைப்படி இவரை நியமித்துள்ளார். மேலும், ஏ.பி.சாஹி நவம்பர் 13ம் தேதிக்குள் பொறுப்பேற்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

More News >>