ப.சிதம்பரத்திற்கு உடல்நலக்குறைவு.. இன்று ஜாமீன் கிடைக்குமா?

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு உடல்நலக்குறைவால் 7 கிலோ எடை குறைந்துள்ளார். மருத்துவக் காரணங்களால் அவருக்கு இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். இதன்பின், அவர் திகார் சிறையில் இருந்து அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த காவல் முடிந்து நேற்று(அக்.30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அமலாக்கத் துறையினர் மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் சிதம்பரத்தை நவம்பர் 13ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு சிறையில் தனி அறை வசதி, வீட்டு சாப்பாடு உள்பட சகல வசதிகளையும் செய்து தர வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது எடை 73 கிலோவில் இருந்து 66 கிலோவாக குறைந்தது. எனவே அவருக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் டி.என்.படேல், ஹரிசங்கர் ஆகியோர் முன்பாக இன்று விசாரணைக்கு வருகிறது.

More News >>