வேற்றுமையில் ஒற்றுமை.. பிரதமர் மோடி பெருமிதம்
சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாளையொட்டி, அவரது 182 மீட்டர் உயரச் சிலை மீது மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் உரையாற்றுகையில், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.
நாட்டின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அம்மாநிலத்தில் கேவாடியா பகுதியில் சர்தார் சரோவர் அணையின் முகப்பில் நிறுவப்பட்டுள்ள 182 மீட்டர் உயரமான படேலின் சிலை மீது பிரதமர் மோடி, மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, படேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்கு நடந்த அணிவகுப்பை பார்வையிட்டார்.
பின்னர், பிரதமர் மோடி பள்ளி மாணவ, மாணவியருடன் சேர்ந்து ஒற்றுமை உறுதிமொழி எடுத்து கொண்டார். படேல் நிர்மாணித்த இந்த நாட்டின் ஒற்றுமைக்கு என்றும் பாடுபடுவேன், நாட்டின் பாதுகாப்புக்கு பணியாற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் குடும்பத்தினரிடம் விருதுகளை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.