ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசமானது.. லடாக்கில் முதல்கவர்னர் பதவியேற்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு, ஜம்முகாஷ்மீர், லடாக் என்ற யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன. லடாக்கில் முதல் லெப்டினன்ட் கவர்னராக ராதாகிருஷ்ண மாத்தூர் பொறுப்பேற்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆக.5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவுக்குள் இருந்தாலும் தனிநாடு போல் செயல்பட்டு வந்த ஜம்மு காஷ்மீர், இப்போது மற்ற மாநிலங்களைப் போல் ஆகி விட்டது.
மேலும், இந்த மாநிலத்தை ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றும் அறிவிப்பாணையும் நேற்று (அக்.30) நள்ளிரவில் அமலுக்கு வந்தது. இதன்படி, புதுச்சேரியைப் போல் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்முகாஷ்மீர் செயல்படும். சண்டிகாரை போல் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும். அதே சமயம், லடாக்கில் 2 மலைப் பிரதேச கவுன்சில்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் கவர்னராக ராதாகிருஷ்ண மாத்தூர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலையில் பதவியேற்றார். காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கீதா மிட்டல், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.