பாகிஸ்தான் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 65 பேர் பரிதாப சாவு
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் கேஸ் ஸ்டவ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சிக்கியும், ரயிலில் இருந்து குதித்ததிலும் 65 பேர் வரை பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் இன்று(அக்.31) அதிகாலையில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்த தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓடும் ரயிலில் சிலர், கேஸ் ஸ்டவ் அடுப்புகளை பற்ற வைத்து காலை உணவு தயாரித்தனர். அப்போது திடீரென தீ மேலெழும்பி பரவியது. இதில், 2 கேஸ் ஸ்டவ் அடுப்புகள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து சிதறின. சமையல் செய்தவர்கள் உணவுக்கான எண்ணெய் வைத்திருந்ததால், அதை தீயை மேலும் வளர்த்து கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால், ஸ்டவ் வெடித்த ரயில் பெட்டியில் இருந்து அடுத்தடுத்த ரயில் பெட்டிகளும் தீ பரவியது. இந்த பயங்கர தீயில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மூன்று ரயில் பெட்டிகளில் தீப்பற்றிய நிலையில், ரயிலில் இருந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியே குதித்தனர். அவர்களில் பலரும் உயிரை இழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில், ஓடும் ரயிலில் கேஸ் ஸ்டவ் பற்ற வைத்து உணவு தயாரித்ததால்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 2 கேஸ் ஸ்டவ் வெடித்து சிதறியுள்ளது. தீயில் சிக்கி இறந்தவர்களைத் தவிர ஓடும் ரயிலில் இருந்து குதித்தவர்களிலும் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பல ரயில்கள் முறையாக பராமரிக்கப்படாமல், பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், தீ விபத்துகளில் பெரிய சேதம் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஜூலையில் நடந்த ரயில் விபத்தில் 11 பேரும், செப்டம்பரில் நடந்த விபத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2005ம் ஆண்டில் 2 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் சுமார் 130 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.