போராடும் அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.. முதலமைச்சர் எச்சரிக்கை..

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, இன்று மதியம் 2 மணிக்குள் போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். எனினும், அரசு டாக்டர்கள், அரசு ஏற்கனவே அளித்த உறுதிமொழியின்படி தங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டுமென்று கூறி வருகின்றனர். டாக்டர்களின் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் செயலிழந்து, நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், அரசு டாக்டர்கள் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன் வைக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்படாத சங்கத்தை சேர்ந்தவர்கள். அதனால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் சங்கத்துடன் ஏற்கனவே பேசி தீர்வு கண்டுள்ளோம்.

இதற்குப் பிறகும்,பிடிவாதம் காட்டும் டாக்டர்களை அரசு வேடிக்கை பார்க்காது. போராட்டம் தொடர்ந்தால் மருத்துவர்கள் மீது நடவடிக்கை பாயும். ஒரு டாக்டரை உருவாக்க மக்கள் பணத்தில் இருந்து ஒரு கோடி 24 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. எனவே, போராடும் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு பதிலாக வேறு டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

More News >>