ரன் மெஷின் விராட் கோலியின் வரலாற்று சாதனை!
இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச புள்ளிப் பட்டியலில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என இரண்டிலும் 900 புள்ளிகளுக்கு மேலாக குவித்து சாதனைப் படைத்துள்ளார்.
சமீபத்தில் இந்திய - தென் ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகல் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி 558 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சதங்களும் அடங்கும்.
இந்நிலையில் ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் பிடித்துள்ளார். மேலும், விராட் கோலி 909 புள்ளிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வீரர் ஒருவர் 900 புள்ளிகளை எடுப்பது இதுவே முதன்முறை.
இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்றதே இந்திய வீரரின் அதிகபட்சமாகும். இது மட்டுமல்லாமல் 1993ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா 911 பெற்றதற்குப் பிறகு தற்போது கோலி தான் தரவரிசையில், ஒருநாள் வீரர்கள் பட்டியலில் 900 புள்ளிகளை தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் விராட் கோலி 912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 947 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இதன் மூலம் ஒரே நேரத்தில் சர்வதேச அளவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 900 புள்ளிகளுக்கு குவித்த இரண்டாவது வீரர் என விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் இரண்டு வடிவிலான தரவரிசையிலும் 900 மேல் புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.