நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்

தமிழகத்தில்  விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடந்தது. இதில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

விக்கிரவாண்டியில் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் 32,445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணன் வெற்றி பெற்றனர்.

இருவரும் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பிறகு காலை 9.30 மணியளவில் சட்டசபையில் சபாநாயகர் பி.தனபால் முன்னிலையில் முத்தமிழ்ச்செல்வன், ரெட்டியார்பட்டி நாராயணன் இருவரும், எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். சபாநாயர் அறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய எம்எல்ஏக்கள் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக 2  எம்எல்ஏக்கள் பதவியேற்றதன் மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

More News >>