தெறி நடிகர் புகாரால் தேசிய விருது இயக்குனருக்கு சிக்கல்... ஒரே மேடையில் சமமாக உட்கார எதிர்ப்பு...
By Chandru
திரைப்படங்களில் ஏற்ற தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்ற கருத்துடன் படங்கள் உருவாகின்றன, ஆனால் திரைப்பட பிரமுகர்களே ஏற்றத் தாழ்வு பார்க்கிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது ஒரு சம்பவம்.
மலையாளத்தில் உருவான 'நார்த் 24 காதம்' படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். இப்படம் சிறந்த படைப்புக்கான தேசிய விருது பெற்றது. சப்தமயஸ்ரீ தஸ்காரஹா, லார்ட் விலிங்ஸ்டோன் 7000 கண்டி போன்ற படங்களையும் இவர் இயக்கி இருக்கிறார். அதேபோல் தமிழில் தெறி மற்றும் ஏராளமான மலையாள படத்தில் நடித்திருப்பவர் பினீஷ் பாஸ்டின்.
கேரளாவில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் அனில் மற்றும் பினீஷ் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி யில் பினீஷ் பங்கேற்பது அனில் ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதாம். பினீஷ் வந்ததுபற்றி இயக்குனருக்கு தெரிந்ததும் கோபம் அடைந்தார். 'பினீஷ் மேடைக்கு வந்தால் நான் வெளியேறிவிடுவேன்' என்றார். டைரக்டர் இவ்வாறு சொன்னதை அறிந்த பினீஷ் கடுப்பானார். தனது அறையிலிருந்து கோபமாக புறப்பட்டவர் நேராக மேடைக்கு சென்று நாற்காலியில் அமராமல் தரையில் உட்கார்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுபற்றி பினீஷ் கூறும்போது,'நான் கட்டிட தொழிலிருந்து நடிக்க வந்தவன். அவரது(இயக்குனர்)பெயரில் இருப்பதுபோல் என்னுடைய பெயரில் மேனன் கிடையாது. நான் தேசிய விருதும் வாங்கவில்லை. இதனால்தான் நான் அவர் பக்கத்தில் உட்கார்வதை அனில் விரும்பவில்லை. என்னை தன் அருகில் உடகாரவிடாமல் தவிர்ப்பதற்காக இப்படி நடந்துகொண்டிருக்கிறார். அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேடையில் சேரில் அமராமல் தரையில் அமர்ந்தேன்' என்றார்.
இதையடுத்து அனில் ராதாகிருஷ்ணனை தாக்கி இணைய தளத்தில் கருத்துக்களை நெட்டிஸன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தன்னைப்பற்றிய தவறான நோக்கம் பரவுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அனில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், பினீஷ் சொல்வது தவறு, நான் ஜாதி பாகுபாடு பார்ப்பவன் கிடையாது. மேனன் என்பது நான் பிறந்தபோதிலிருந்தே என்னுடன் இருக்கும் பெயர். அவரைப் போல் நான் பிரபல நடிகர் கிடையாது. அவர் மேடையில் இருந்தால் நான் பேசுவதை யாரும் கேட்கமாட்டார்கள். மேலும் என்னைமட்டுமே இந்த விழாவுக்கு அழைப்பதாக கூறியிருந்தார்கள். அதனல்தான் கோபப்பட்டேன் எனவும் தெரிவித்தார்.