சிவசேனா-பாஜக இழுபறி நீடிப்பு.. சோனியாவுடன் பவார் சந்திப்பு..
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மோதலால், தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இன்னும் ஆட்சி அமையவில்லை. இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சோனியாவை சரத்பவார் சந்தித்து பேசுகிறார்.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை.
அதன்பின்பு, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேரடியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசினார். அப்போது, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. அதனால், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 14 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகளில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது.
இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்படவில்லை. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக முதல்வர் பட்நாவிஸ் தேர்வு செய்யப்பட்டு விட்டார். ஆனாலும் இது வரை கவர்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. சிவசேனாவை வழிக்கு கொண்டு வர பாஜக பலவிதமாக மறைமுக மிரட்டல் விடுத்தது. பாதி எம்.எல்.ஏ.க்களை இழுத்து கட்சியை உடைத்து விடுவோம், சிவசேனா கட்சியினர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்றெல்லாம் மிரட்டல் விட்டது.
ஆனால், சிவசேனா கட்சியினரோ அதற்கு மசியாததுடன், பாஜகவுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். முதல் கட்சியான பாஜகவால் ஆட்சியமைக்க முடியாவிட்டால், 2வது பெரிய கட்சியான நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். மெஜாரிட்டிக்கு 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், 175 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக சஞ்சய் ரவுத் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், சிவசேனாவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்து சோனியாவிடம் ஆலோசிப்பதற்காக சரத்பவார் டெல்லி சென்றுள்ளார். காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டதால், அந்த கட்சியுடன் சேர்ந்துதான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று பவார் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சிவசேனாவில் இருந்து காங்கிரசுக்கு வந்த சஞ்சய் நிருபம், சிவசேனா, பாஜகவிடம் அதிக மந்திரி பதவிகளை பெறுவதற்காக நாடகம் ஆடுகிறது. அது பாஜகவை விட்டு தனியாக வராது என்று கூறியிருக்கிறார்.