திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை குறிப்பிட்டார்.
இதை தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டிருந்தனர். அந்த படத்தில் திருவள்ளுவர் காவி உடையணிந்து திருநீறு பூசியிருந்தார்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட திருவள்ளுவருக்கும் காவிச் சாயம் பூசுவதற்கு பாஜக முயல்வதாக கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர், சில திருக்குறள்களை குறிப்பிட்டு, திருவள்ளுவர் சனாதன கோட்பாடுகளின் அடிப்படையில்தான் திருக்குறள்களை எழுதியுள்ளார் என்று பதிலளித்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது யாரோ மர்ம ஆசாமிகள் சாணத்தை வீசியிருக்கிறார்கள். இதை தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிலையை அவமதிப்பு செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது.
இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.