திருச்சியில் கவர்னருக்கு எதிராக திமுக கருப்புக் கொடி காட்டி போராட்டம்
மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிராக ஆய்வு செய்து வருவதாக கூறி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வுகளின் முடிவில் அரசுத் துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி சுகாதாரப்பணி குறித்து ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திருச்சியில் மாவட்ட கலெக்டர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வு செய்வதற்காக இன்று கவர்னர் திருச்சி வந்துள்ளார்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கவர்னரின் இந்த செயல் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையிலும் உள்ளதாக கூறி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபோல், திருச்சி புதுக்கோட்டை மெயின்ரோடு சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் அருகே திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கவர்னருக்கு எதிராக கோஷங்கள் ஏழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.